அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ‘'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு - சென்சார் மோதலில் சிக்கிய ₹500 கோடி படம்!
விஜய் - எச்.வினோத் கூட்டணியில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
"டிசம்பர் 18-லேயே விண்ணப்பித்துவிட்டோம். 'யு/ஏ' சான்றிதழ் தருவதாகக் கூறிவிட்டு, திடீரென மர்மமான புகாரைக் காரணம் காட்டி மறுஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்பியுள்ளனர். ₹500 கோடி முதலீடு செய்துள்ளோம், 22 நாடுகளில் ரிலீஸாக வேண்டிய படம் இது" என வாதிட்டனர்.
— KVN Productions (@KvnProductions) January 7, 2026
"மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் இலச்சினைகள் (Logos) அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்துப் புகார் வந்துள்ளது. சட்டப்படிதான் செயல்படுகிறோம், உள்நோக்கம் ஏதுமில்லை" எனத் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, இந்த வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு நாளைதான் வரும் என்பதால், திட்டமிட்டபடி நாளை படத்தை வெளியிட முடியாது என்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "தவிர்க்க முடியாத காரணங்களினால் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்."

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசி படம் என்பதால், இதற்கு வரலாறு காணாத எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பணத்தைத் திருப்பித் தரும் நடவடிக்கைகள் குறித்துத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். 'ஜனநாயகன்' தள்ளிப்போயுள்ளதால், பொங்கலுக்கு வெளியாகவிருந்த பிற சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
