அட கொடுமையே... தமிழகத்தில் 11 மாதங்களில் 5.25 லட்சம் பேருக்கு நாய்க்கடிக்கான சிகிச்சை.. 29 பேர் பலி!
தமிழ்நாட்டில் நாய் கடிகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மட்டும் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு நாய் கடிக்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் மட்டுமின்றி, முறையான தடுப்பூசி போடப்படாத வளர்ப்பு நாய்களிடமும் ஆபத்து இருப்பதால், நாய் கடி விவகாரம் ஒரு தீவிர பொது சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளது.
நாய் கடியினால் வரும் ரேபிஸ் (Rabies) நோய், உடனடி மற்றும் முறையான சிகிச்சை பெறாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் நாய் கடியினால் ரேபிஸ் நோய் வந்து 29 பேர் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட ஆய்வில், ரேபிஸ் நோய் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மற்றும் நாய் கடித்தவுடன் உடனடியாக சிகிச்சைக்குச் செல்பவர்களின் அளவு மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாய்கள் மனிதர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து, விசுவாசத்துடனும் அன்பாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், முறையான தடுப்பூசி போடப்படாத வளர்ப்பு நாய்களும் ஆபத்தை விளைவிக்கும். தற்போது தமிழ்நாட்டில் தெருநாய்களைப் போலவே வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால், அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாகும். நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான மற்றும் கட்டாயமான நடவடிக்கை, அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதுதான்.
சிகிச்சை முறைகள்:
நாய் கடித்தால், ரேபிஸ் நோய் வராமல் தடுக்க இரண்டு வகையான மருந்துகள் தேவைப்படுகின்றன:
ரேபிஸ் இம்யுனோ குளோபுலின் (RIG - Rabies Immunoglobulin): இது கடிபட்ட இடத்தில் செலுத்தப்படும் ஊசி மருந்து.
ஏ.ஆர்.வி (ARV - Anti Rabies Vaccine): இது ரேபிஸ் நோய் தடுப்பூசி ஆகும்.

தடுப்பூசி கால அட்டவணை:
ரேபிஸ் தடுப்பூசியை, நாய் கடித்தவுடன் போட்டுவிட்டு, தொடர்ந்து 3, 7, 28-ம் நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு தவணையாக மொத்தம் 4 தவணைகளை முழுமையாகப் போட்டு முடிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் முதல் தவணையை மட்டும் போட்டுவிட்டு, மற்ற தவணைகளைத் தவறவிடுகின்றனர். இது ஆபத்தானது.
ரேபிஸ் நோய் உள்ள நாய்கள் கடிக்க வேண்டும் என்பதில்லை. அதன் நகங்களால் பிராண்டினாலோ அல்லது தோல் உறிந்த இடத்தில் நாக்கால் நக்கினாலோ கூட ரேபிஸ் நோய் வரும் ஆபத்து இருக்கிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், நாய் கடிக்குத் தேவையான தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யுனோ குளோபுலின் மருந்து ஆகியவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டும் என்ற அவசியமில்லை. கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் உள்ள 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாகச் சென்று சிகிச்சை பெறலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
