கோவையில் போலீசார் சுட்டுப் பிடித்த 3 கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து 13 வீடுகளில் சுமார் 42 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மொத்தம் 1,848 வீடுகள் அமைந்துள்ளன. அரசு அலுவலர்கள் அதிகம் வசிக்கும் இந்தக் குடியிருப்பில் உள்ள ஏ பிளாக்கில் 3 வீடுகளிலும், சி பிளாக்கில் 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் ஒரே சமயத்தில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.சம்பவம் குறித்துத் தகவலறிந்த கவுண்டம்பாளையம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்தக் குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 வீடுகளில் இருந்து 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்தக் கோரக் கொள்ளைச் சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், இந்தத் திருட்டுச் சம்பவங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் ஈடுபட்டதும், அவர்கள் அனைவரும் குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையர்கள் பதுங்கியுள்ள இடத்தைக் கண்டறிந்த காவல்துறையினர், சனிக்கிழமை காலை 9 மணியளவில் அந்தப் பகுதிக்குச் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்கள் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசிப் (48), இர்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய மூன்று கொள்ளையர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தின் ஜில்லாகாசிபூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் (48) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். காவல்துறையினர் சுட்டதில் காலில் பலத்த காயம் அடைந்த ஆசிப்புக்குத் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறியதாலேயே அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற இரண்டு கொள்ளையர்களுக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
