80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழு ஓய்வூதியம்... முதல்வரே உடனடி நடவடிக்கை எடுங்க... ஓபிஎஸ் கதறல்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை எண் 308 ல், “மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது வேறு விஷயம்.
ஆனால், 80வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கே 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் மாதக் கணக்கில் தாமதம் ஏற்படும் அவல நிலை நிலவி வருகிறது. இதனையும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவான்" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழு ஓய்வூதியத் தொகையில் 33 விழுக்காட்டிற்கு மிகாமல் அரசு பெற்றுக் கொள்வது வழக்கம். இதற்குப் பதிலாக, முழு ஓய்வூதியத் தொகையில் 33 விழுக்காடு குறைக்கப்படும்.
இதனை குறை ஓய்வூதியம் எனக் கூறுவர். இந்த குறை ஓய்வூதியம் 15 ஆண்டுகள் வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். இதேபோன்று, 80வயது நிறைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். இதற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுதான் நடைமுறை.
மேற்படி நடைமுறையை உடனுக்குடன் அமல்படுத்துவதில் நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும், வயதான காலத்தில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக ஓய்வூதியதாரர்கள் கலங்கி நிற்கின்றனர்.
இது குறித்த புகார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாகவும். சுகாதார காப்பீட்டு அட்டை பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை என்றும் ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமா அல்லது நிதிப் பற்றாக்குறை காரணமா என்று தெரியவில்லை. தற்போதுள்ள கணினிக் காலத்தில் இதைக்கூட செய்ய இயலாதது வேதனைக்குரியது.
முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வண்ணமும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!