சோகத்திலும் நெகிழ்ச்சி... விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. மார்த்தாண்டம் அடுத்த பயணம் பகுதியைச் சேர்ந்த லதா (43), கடந்த 3-ஆம் தேதி தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, லதா மூளைச்சாவு அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் துயரமான நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய லதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
தானம் பெறப்பட்ட இதயம் மற்றும் ஒரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்ற உறுப்புகள் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் உள்ள நோயாளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்த நிலையிலும் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்த லதாவின் குடும்பத்தினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசு விதிமுறைகளின்படி, உடல் உறுப்பு தானம் செய்த லதாவின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
