அமைச்சர் அன்பில் மகேஷ் காரை மறித்துப் பெற்றோர்கள் போராட்டம்!
சென்னை அடையார் காந்தி நகரில் உள்ள புகழ்பெற்ற குமாரராணி மீனா முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூடப்பட உள்ளதாக அண்மைக்காலமாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சும் பெற்றோர்கள், கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளியை மூடும் எண்ணம் அரசிடம் இல்லை; அப்படி எதுவும் நடக்காது" என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், இன்று அதே குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்தார்.

அமைச்சரின் கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பெற்றோர்கள் திடீரென காரை மறித்தனர். குறிப்பாகப் பெண் ஒருவர் அமைச்சரின் காரின் முன்பாக நின்று மறிக்கவே, காரைத் தொடர முடியாமல் நின்றது. நிலைமை தீவிரமடைவதைக் கண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், காரை விட்டு உடனடியாகக் கீழே இறங்கி பெற்றோரிடம் பேசினார்.
"பள்ளியை மூடினால் எங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடும், எங்களுக்குத் தெளிவான நீதி வேண்டும்" எனப் பெற்றோர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், "பள்ளியை மூடும் திட்டம் எதுவும் இல்லை. நான் இப்போதே பள்ளி முதல்வரிடம் பேசி உரிய விளக்கம் கேட்கிறேன். உங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படாது" என மீண்டும் உறுதியளித்தார். அமைச்சரின் நேரடிப் பேச்சைத் தொடர்ந்து, பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், பள்ளி மூடல் குறித்த வதந்திகளால் பெற்றோர்கள் மத்தியில் நிலவும் பதற்றம், அமைச்சரின் இந்தச் சமாதானப் பேச்சால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
