உச்சக்கட்டப் பாதுகாப்பு... குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேலூர் வருகை - ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பகுதி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!

 
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, அவரதுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தங்கக் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் சிவில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் அருகே உள்ள ஸ்ரீபுரத்தில் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயில் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 17-ஆம் தேதி காலை 11 மணிக்குத் திருப்பதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகிறார்.

திரௌபதி முர்மு

அவர் தங்கக் கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகியோரைத் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார். பின்னர், தங்கக் கோயில் அருகே ஸ்ரீநாராயணி ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.

பகல் 12.30 மணியளவில் அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவரின் இந்த வருகையின்போது, அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வருகை தர உள்ளனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

திரௌபதி முர்மு

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு வருவதையொட்டி, தங்கக் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகின்றன. எனவே, வரும் 17-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் எந்தக் காரணத்துக்காகவும் ட்ரோன்கள் மற்றும் சிவில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!