2026 தேர்தலில் தவெகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்... டிடிவி தினகரன்!
சென்னை ராமாபுரத்தில் உள்ள அமமுக நிர்வாகி சத்தியமூர்த்தி வீட்டிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். சமீபத்தில் சத்தியமூர்த்தி மகன் பாலமுருகன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத தினகரன் வீட்டிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி வந்தது முதல் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026ம் ஆண்டில் மக்கள் இதற்கு முடிவு கட்டுவார்கள். ஆனால் தமிழ்நாடு அமைதியாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார்; அது உண்மையல்ல. மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். உண்மையில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறையினரும் போராடி வருகிறார்கள். முதல்வரின் சொந்த மாவட்டமான தஞ்சையிலேயே போராட்டம் நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றுங்கள் என சாலையில் இறங்கி போராடாதவர்களே இல்லை.

இன்னும் சொல்லப்போனால் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஆட்சி உள்ளது. அமமுக ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது. இதில் புதிய சர்ப்ரைஸ் ஒன்றுமில்லை. வேறு ஏதாவது சர்ப்ரைஸ் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

கண்டிப்பாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். 2026ம் ஆண்டு பாஜக ஆட்சிதான் அமையும் என்று அண்ணாமலை கூறியது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தான் பதில் கூற வேண்டும். மதுரையில் பாஜக முருக பக்த மாநாடு நடத்துவது ஆன்மீகமாக இருந்தாலும், அதனை அரசியல் சார்ந்தவர்கள் நடத்துவதால் அதனை அரசியல் மாநாடு என்று தான் சொல்வார்கள். 2026ம் ஆண்டு தேர்தலில் தவெக கட்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
