வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... ப்ரீமியம் பெட்ரோல் விலை திடீர் உயர்வு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி (IOCL), பி.பி.சி.எல் (BPCL) மற்றும் ஹெச்.பி.சி.எல் (HPCL) ஆகியவை இன்று (வெள்ளிக்கிழமை, மார்ச் 20) முதல் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 'எக்ஸ்பி 95' (XP95), பாரத் பெட்ரோலியத்தின் 'ஸ்பீடு' (Speed) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் 'பவர்' (Power) ஆகிய பிரீமியம் பெட்ரோல் வகைகளின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 2.35 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 119 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் முதற்கட்டமாகப் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. இருப்பினும், பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது நடுத்தர மக்களுக்குச் சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று சாதாரண பெட்ரோல் ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் 92.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதிய விலை உயர்வின் காரணமாகப் பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்தும் சொகுசு கார் மற்றும் உயர்தர பைக் உரிமையாளர்கள் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது. வரும் நாட்களில் போர் பதற்றம் நீடித்தால், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் நிறுவனங்களின் இந்தத் திடீர் விலை உயர்வு, பங்குச் சந்தையில் அந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை 3.5% வரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
