பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு!

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் பரஸ்பர வரி அச்சுறுத்தல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை என மத்திய அரசை குறிவைத்து பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதேநேரம், துணை மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை பூா்த்தி செய்தல், மணிப்பூா் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல், முக்கியத்துவம் வாய்ந்த வஃக்ப் மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவை மத்திய அரசின் முன்னுரிமைகளாக உள்ளன.
ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமா்வு திங்கட்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 13ம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ள நிலையில், அந்த மாநில பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்யவிருக்கிறாா். இதேபோல், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தை முன்வைத்து, ஆளும்-எதிா்க்கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விளக்கமளித்த தோ்தல் ஆணையம், 'வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். அவா்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும்.
வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடியில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். இந்தப் பிரச்னைக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. வக்ஃப் மசோதாவை விரைந்து நிறைவேற்றுவது மத்திய அரசின் முன்னுரிமை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிா்க்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது. மும்மொழிக் கொள்கை, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரங்களை திமுக எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!