1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு... ₹1,894 கோடி செலவில் 'பி.எம். மித்ரா' ஜவுளிப் பூங்கா!!
மத்திய அரசின் அறிவிப்புப்படி, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்கா (PM MITRA Park) தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. சுமார் ₹1,894 கோடி செலவில், 1,052 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த பிரமாண்டப் பூங்கா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்கா அமைவதன் முக்கியத்துவம்
மத்திய நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 7 'பி.எம். மித்ரா' பூங்காக்களில் ஒன்று தமிழகத்தில் அமையவிருப்பது மாநில வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்தத் திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் மூலம் இந்தப் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.

விருதுநகரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்
விருதுநகர் ஜவுளிப் பூங்கா அமைவதற்குச் சாதகமான அம்சங்கள் என கருதப்படுவது, விருதுநகர் அருகாமையில் உள்ள ஜவுளி மையங்கள்: இந்தப் பூங்கா, கோயம்புத்தூர் - தூத்துக்குடி வழித்தடத்தின் அருகில் அமைந்துள்ளது. ராஜபாளையம், மதுரை, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய முக்கிய ஜவுளித் தொகுப்புகளுக்கு மிக அருகில் இருப்பதால் சாதகமான சூழல் நிலவுகிறது.
மூலப்பொருட்கள் எளிதில் கிடைத்தல்: விருதுநகர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால், மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதற்கான வசதி உள்ளது.
உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகள்
1,052 ஏக்கர் பரப்பளவில் அறிவிக்கப்பட்டாலும், 600.83 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகள் அமைய இருக்கின்றன. தொழிற்சாலைகள் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ₹55.32 லட்சம் என சிப்காட் நிறுவனம் நிர்ணயித்துள்ளதுடன், பின்வரும் நவீன வசதிகளை உறுதி செய்துள்ளது:
தடையற்ற நீர் மற்றும் மின்சாரம் விநியோகம், கழிவுநீர் மற்றும் சுத்திகரிப்பு நிலையம், மின்சார வசதிக்காகத் தனியாக துணை மின்நிலையம், திறன் மேம்பாட்டு மையம், சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகம், உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்த கண்காட்சி மையம்.

போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வசதி
வெளிநாடுகளுக்கு கடல் வழியாக அனுப்ப 100 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. ஆகாய மார்க்கமாகப் பொருட்களைக் கொண்டு செல்ல 50 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை விமான நிலையம் உள்ளது. பிற மாநிலங்களுக்குப் பொருட்களை அனுப்ப சாலை மற்றும் ரயில்: வசதியாக அருகிலேயே ரயில் நிலையமும், சிறந்த சாலை வசதிகளும் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்கா, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கும் பெரும் ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளும் விருதுநகரில் சிறப்பாக உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
