டிச.29ல் பாமக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் - ஜி.கே.மணி உறுதி!
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் (பாமக) நிலவி வரும் தலைமைப் போட்டி மற்றும் உட்கட்சிப் பூசல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியின் எதிர்காலம் மற்றும் கூட்டணி குறித்த அதிரடித் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஜி.கே. மணி பேசுகையில், "வரும் டிசம்பர் 29-ம் தேதி (திங்கட்கிழமை) சேலம் மாநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தப் பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. "2025-க்கு விடை கொடுப்போம், 2026-ஐ வரவேற்போம்" என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த இறுதி அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என்று ஜி.கே. மணி உறுதிபடக் கூறினார்.
ராமதாஸ் நடத்தும் இந்தப் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்திருப்பதற்கு ஜி.கே. மணி கடும் கண்டனம் தெரிவித்தார். "ராமதாஸ்தான் இந்தக் கட்சியை உருவாக்கியவர். அவரை அவமானப்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. அவர் கண் கலங்கிப் பேசினார்" என்று கூறிய ஜி.கே. மணி, மருத்துவர் ராமதாஸை அவமானப்படுத்த வேண்டாம் என அன்புமணி தரப்பினரை எச்சரித்தார். அன்புமணி தற்போது பாமகவின் உறுப்பினராகக் கூட இல்லை என்றும், தேர்தல் ஆணையத்திடம் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கட்சிக்குள்ளான பிளவுக்குத் தம்மைக் காரணமாகச் சொல்வதை மறுத்த ஜி.கே. மணி, "மருத்துவர் ராமதாஸும், அன்புமணியும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒருவேளை நான் கட்சியை விட்டு வெளியேறினால் தான் இருவரும் இணைவார்கள் என்றால், அடுத்த நொடியே நான் விலகத் தயார்" என்று உருக்கமாக கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
