கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் கொலைகள், போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு .... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொலைகள், கூலிப்படைத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் மாணவர்களை சீரழித்து வருவதாகவும், மது மற்றும் போதைப்பொருள் கலாசாரத்தால் குடும்ப வன்முறைகள் போன்ற குற்றங்கள் பெருகி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். கொலைகள், கூலிப்படைத் தாக்குதல்கள் தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தி.மு.க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. 2023ஐ ஒப்பிடுகையில் 2024ல் கொலைகள் 7% குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் 2024-ல் கொலை வழக்குகள் 6.8% குறைந்ததாகவும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் கொலையின் எண்ணிக்கையில் வேண்டுமானால், கொஞ்சம், முன்னே பின்னே இருக்கலாமே தவிர, இந்த ஆட்சி காலத்தில்தான், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உயிர் பயத்துடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
அரசியல் தலைவர்கள் படுகொலை திமுக கூட்டணியில் உள்ளது காங்கிரஸ். அந்த கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவரான கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங், மே 2, 2024 அன்று திடீரென காணாமல் போனார். 2 நாட்கள் கழித்து வரது விவசாயத் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை கால்கள் மின்சாரக் கம்பிகளால் கட்டப்பட்டு கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஜெயக்குமார் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 30 ம் தேதி தனக்கு சில காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட எட்டு நபர்களால் கொலை மிரட்டல் இருப்பதாக புகார் அளித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே புகார் கொடுத்தும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 47) 2024ம் ஆண்டு, ஜூலை 5 அன்று மாலை, சென்னை பெரம்பூர் அருகே செம்பியம் பகுதியில் அவரது கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமான ஆயுதங்களால் ஆம்ஸ்ட்ராங்கைத் தாக்கியது . 2023 ல் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 28, 2024 அன்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக, 24 மணி நேரத்திற்குள் வெவ்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 2 அரசியல் பிரமுகர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க வார்டு செயலாளர் பத்மநாபன், கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார் . பா.ஜ.க சிவகங்கை கூட்டுறவுப் பிரிவு செயலாளர் செல்வகுமாரும் அன்றைய தினம் தப்பவில்லை. பைக்கில் சென்றபோது நடு ரோட்டில் அச்சமேயின்றி கொலையாளிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக, 2023ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்துசாமி, அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் . இச்சம்பவம், அரசு அதிகாரிகளையே அச்சத்தில் உறைய வைக்கும் அளவுக்கான கொடூரமாக இருந்தது.
மே 4ம் தேதி , 2024 அன்று, திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தவருமான டி. பெர்டின் ராயன் ஆயுதங்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது . இவர், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நடக்கும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் . கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக பேட்டி கொடுத்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் லாரி மோதியதில் பலியானார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியில் தனிப்பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹீர் உசேன் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டதுதான். 2025, மார்ச் மாதம் தர்காவுக்கு தொழுகை நடத்தச் சென்று விட்டு நடந்து வீட்டுக்கு போனபோது இந்த படுகொலை நடத்தப்பட்டது. வக்பு சொத்துக்களை காக்க எவ்வளவோமுறை புகார் கொடுத்தவர் . தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்று வீடியோவும் வெளியிட்டவர் .
ஆனாலும் தமிழக காவல்துறை அதைபற்றி சீரியஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு தமிழக காவல்துறையினருக்கு போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியுள்ளன.
இச்சம்பவம் சட்டசபையிலும் பெரும் விவாதப் பொருளானது. தமிழக காவல்துறையின் அமலாக்கப் பிரிவு புள்ளிவிவரங்களின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாக, பறிமுதல் செய்வது 2024ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ல் 39,910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024 ல் இந்த எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 24,215 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ம் ஆண்டில், அதாவது திமுக ஆட்சிக்கு வந்த முதல் வருடத்தில், அதற்கு, முந்தைய ஆண்டை விட 16% அதிகரித்துள்ளதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
2020-ல் 404 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2021-ல் 442 ஆக உயர்ந்தன. தமிழகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 33.5% உயர்ந்துள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் 2023 உடன் ஒப்பிடும்போது ஒரே ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 16% உயர்ந்துள்ளதும், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் 52% உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
2021 தேர்தல் அறிக்கையில் "புதிய விடியலை" உருவாக்கும் நோக்கில், "குற்றங்கள் இல்லாத, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலம்" உருவாக்கப்படும் என ஸ்டாலின் ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிடுவதாக உறுதியளித்தார். 2022ல் நடைபெற்ற கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சமூக விரோத சக்திகள் மற்றும் கூலிப்படையினர் சட்டம் ஒழுங்கையும், பொது அமைதியையும் சீர்குலைத்தால் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சூளுரைத்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கு பிறகுதான் நாம் மேலே குறிப்பிட்ட பல குற்றச்செயல்கள் அரங்கேறியிருப்பதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்துப்போன இரும்புக் கரம் எப்போது செயல்படத் தொடங்கும் என்ற கேள்விகள் ஸ்டாலினை நோக்கி வைக்கப்படுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!