பொங்கல் பரிசுத்தொகுப்பு.. அரசாணை வெளியீடு - என்னென்ன பொருட்கள்? ரொக்கம் எவ்வளவு?!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள்: தமிழக கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகுப்பிற்காகத் தமிழக அரசு மொத்தம் ரூ. 248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் 85% நிறைவடைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தல் ஆண்டு என்பதால், கடந்த ஆண்டு வழங்கப்படாத ரொக்கப்பணம் இந்த முறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ. 5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.அரசுத் தரப்பில் ரூ.3,000 வரை ரொக்கப்பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ரொக்கப்பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன்கள் அச்சிடப்பட்டுத் தயாராக இருக்க வேண்டும். பொங்கல் தொகுப்பு விநியோகத்தை ஜனவரி 10-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
