கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்வு... வேர்க்கடலை விலை ஏற்றத்தால் உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி!
புவிசார் குறியீடு பெற்ற உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலை, மூலப்பொருட்களின் அதீத விலை உயர்வு காரணமாக இன்று முதல் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக்கடலை 8,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 14,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது தவிர, மிட்டாய்களை பேக் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் கவர்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, சில்லறை விற்பனையில் இதுவரை ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்கப்பட்ட கடலை மிட்டாய், இனி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்கு நிலக்கடலை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை உயர்வு ஒருபுறம் இருக்க, வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கோவில்பட்டி கடலை மிட்டாய்களின் ஏற்றுமதியும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கமடைந்துள்ளதால், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 20,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடலை மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை, தூத்துக்குடி மாவட்டப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
