தேவலாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வழிபாடு.. சிறப்பு பிரார்த்தனை.. "அன்பும், அமைதியும் நிலவ" வாழ்த்து!

 
மோடி கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று டிசம்பர் 25ம் தேதி காலை, டெல்லி கோல் டக் கானா பகுதியில் அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் கத்தீட்ரல் (Sacred Heart Cathedral) தேவாலயத்திற்குப் பிரதமர் மோடி வருகை தந்தார். கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி அங்கு நடைபெற்ற சிறப்புத் திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனையில் அவர் பங்கேற்றார். தேவாலயத்திற்கு வந்த பிரதமரைத் திருச்சபை நிர்வாகிகள் மற்றும் மதகுருமார்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் உள்ள மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துப் பிரதமர் வழிபாடு செய்தார்.


பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுடனும், குழந்தைகளுடனும் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார். தேவாலய வளாகத்தில் இருந்த குழந்தைகளிடம் நலம் விசாரித்து, அவர்களுக்குத் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். பிரதமரின் இந்த வருகை தேவாலயத்திற்கு வந்திருந்த மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வழிபாடு முடிந்து திரும்பிய பின், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி, "டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த வழிபாட்டுக் கூட்டம் பிரதிபலித்தது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் கிறிஸ்துமஸின் உயரிய உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணத்தையும் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும்."

மோடி

கடந்த சில ஆண்டுகளாகவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ மதத் தலைவர்களைச் சந்திப்பதையும், தேவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதையும் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். இது நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் விதமாகவும், அனைத்து சமூக மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

டெல்லி மட்டுமல்லாமல், தமிழகத்தின் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் தேவாலயம், கேரளா மற்றும் கோவா என நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வீடுகள் தோறும் இனிப்புகள் வழங்கியும், கரோல் பாடல்கள் பாடியும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!