புழல் சிறையில் கைதி அடித்துக் கொலை... கைக்குழந்தையுடன் கதறும் மனைவி!
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 29 வயது இளைஞர் புனிதன் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் போலீசாருடன், அடித்துக் கொலை செய்ததாக புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தாம்பரம் அருகே உள்ள சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த புனிதன் (29), வழிப்பறி வழக்கு ஒன்றில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிறையிலேயே சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் திடீரென மயக்கமடைந்த புனிதன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று (பிப்ரவரி 19, 2026) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனிதன் உயிரிழந்த தகவலறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கைக்குழந்தையுடன் கதறிய அவரது மனைவி, காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
"அவரைக் கைது செய்யும் போதே உடல்நிலை சரியில்லை என்று சொன்னோம். ஆனால், அதைக் கேட்காமல் போலீசார் சிறையில் அடைத்தனர். உரிய நேரத்தில் அவருக்குச் சிகிச்சை அளித்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார்" எனக் கண்ணீருடன் தெரிவித்தார். சிறையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

உறவினர்களின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை கைதி சிறையில் உயிரிழந்துள்ளதால், இது தொடர்பாக நீதிமன்ற நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
