அரசு, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து... 20-க்கும் மேற்பட்டோர் காயம்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில், அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அடுத்தடுத்து பேருந்து மோதல் விபத்துகள் நிகழ்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் கோட்டூர் பகுதியில் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோதியதில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாகப் பேருந்துகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் அமர்ந்திருந்த பயணிகள் கடுமையாகக் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, 31-ஆம் தேதி காரைக்குடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிய கோர விபத்தில் 11 பேர் பலியான நிலையில், மீண்டும் இந்த நேருக்கு நேர் மோதல் விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
