நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கைது!
குமரி-கேரளா இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு அதற்காக நிலம் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளால் வரையறை செய்யப்பட்டது. தொடர்ந்து குமரி மாவட்டத்தில் அடைக்காக்குழி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 20 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீட்டுமனைகள் விவசாய நிலங்கள், ஏரி குளங்கள் உள்ளிட்டவை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்கி வந்தது. இந்த தொகையை அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் ஒரே மாதிரி வழங்காமல் பாரபட்சம் பார்த்து வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் பாதிக்கப்பட்டவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே நேரம் கேரளா பகுதியில் இந்த சாலைகள் முழுமையாக முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்டம் காப்புக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சாலைப் பணி தொடங்க வந்த அதிகாரிகளையும் பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வந்தனர். போராட்டத்தின் போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றனர்.
ஆனால் இழப்பீடு வழங்கிய பாடில்லை. இந்நிலையில் திட்ட அதிகாரி வேல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் 4 வழிச்சாலை பணியை தொடங்க காப்புக்காடு பகுதிக்கு வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் குளச்சல் உதவி போலீஸ் பிரவீன் கவுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் எம்எல்ஏ உட்பட 9 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி புதுக்கடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
