ராமதாஸ் vs அன்புமணி: பாமகவில் 'மாம்பழம்' யாருக்கு? தைலாபுரம் கூட்டத்தில் அதிரடி முடிவு!

 
அன்புமணி ராமதாஸ் பாமக

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) ஏற்பட்டுள்ள தந்தை-மகன் இடையிலான அதிகார மோதல், ஒரு மிகப்பெரிய அரசியல் பிளவாக உருவெடுத்துள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஜனவரி 12, 2026) நடைபெறும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தந்தையா? மகனா?" என்ற அதிகாரப் போர் பாட்டாளி மக்கள் கட்சியை இன்று இரண்டு துண்டுகளாக உடைத்துள்ளது. ஒருபுறம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், மறுபுறம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "அந்தக் கூட்டணி செல்லாது" என அதிரடி முழக்கமிட்டுள்ளார். இந்த மோதலின் உச்சகட்டமாக இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

 ராமதாஸ், அன்புமணி

கடந்த வாரம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எஸ்பிஐ இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், 2026 தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார். "இது தொண்டர்களின் விருப்பம்; திமுகவின் ஊழல் ஆட்சியை வீழ்த்தவே இந்த முடிவு," என அவர் விளக்கமளித்தார். தேர்தல் ஆணையம் தன்னைத் தலைவராக அங்கீகரித்துள்ளதால், கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கே உண்டு என்பது அன்புமணியின் வாதம்.

மகனின் இந்தத் தனிச்சச்சையான முடிவால் கொதிப்படைந்த டாக்டர் ராமதாஸ், "நிறுவனர் என்ற முறையில் நானே கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவன்; அன்புமணிக்கும் கட்சிக்கும் இனி தொடர்பில்லை," எனப் பகிரங்கமாக அறிவித்தார். சமீபத்தில் தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்றுப் பேசிய ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. "திமுக கூட்டணியில் சேர எங்களுக்குத் திருமாவளவன் ஒரு தடையல்ல" என அவர் சூசகமாகக் கூறியது, பாமக-வின் ஒரு பிரிவு அறிவாலயத்தை நோக்கி நகரத் தயாராக இருப்பதையே காட்டுகிறது.

 ராமதாஸ்

இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கூட்டியுள்ள கூட்டத்தில், அவருக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், அன்புமணியைக் கட்சியிலிருந்து முறைப்படி நீக்குவது, அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தை ரத்து செய்வது, புதிய தேர்தல் வியூகம் மற்றும் மாம்பழம் சின்னத்தை மீட்பதற்கான சட்டப் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பாமகவின் 5 எம்.எல்.ஏ-க்களில் 3 பேர் அன்புமணியின் பக்கமும், 2 பேர் ராமதாஸின் பக்கமும் இருப்பதாகத் தெரிகிறது. வன்னியர் வாக்கு வங்கியைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி அன்புமணியை நம்பியிருக்க, திமுகவோ ராமதாஸின் ஆதரவைப் பெற்று வட மாவட்டங்களில் அதிமுகவை வீழ்த்தத் திட்டமிடுகிறது. 2026 தேர்தலில் அப்பா ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் எனப் பிரிந்து நிற்பது பாட்டாளித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!