"வரியைச் செலுத்தத் தயார்.. சரியான தொகையைச் சொல்லுங்கள்!" - ஜெயலலிதா வாரிசுகள் தீபா, தீபக் உயர்நீதிமன்றத்தில் தகவல்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கி தொடர்பான வழக்கில், சரியான வரித் தொகையைத் தெரிவித்தால் அதனைச் செலுத்தத் தயாராக இருப்பதாக அவரது வாரிசுகளான தீபா மற்றும் தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட இவர்களுக்கு, 13 கோடி ரூபாய் வரிப் பாக்கி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது தீபா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "ஆரம்பத்தில் 46 கோடி ரூபாய் வரி மற்றும் செல்வ வரி செலுத்தக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அந்தத் தொகை 36 கோடியாகவும், கடைசியாக 13 கோடியாகவும் குறைத்து நோட்டீஸ்கள் வந்தன. இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் வருவதால் குழப்பம் நிலவுகிறது. வருமான வரித்துறை சரியான தொகையைத் துல்லியமாகத் தெரிவித்தால், அந்தப் பாக்கியைச் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். மேலும், மறைந்த முதலமைச்சரின் மீதான இந்த வழக்கில் அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதி, "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; இதில் யாரும் எந்தவிதமான சிறப்புச் சலுகையையும் கோர முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வருமான வரித்துறை வழக்கறிஞர், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரிப் பாக்கி எவ்வளவு என்பது குறித்த சரியான கணக்கு விவரங்களைச் சரிபார்த்து விளக்கம் அளிக்கக் கூடுதல் அவகாசம் தேவை எனக் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் இந்த வாரிசுகளின் வசம் உள்ள நிலையில், இந்த வழக்கின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
