நிருபருக்கு கொலை மிரட்டல்... சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நிருபரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சீமான், "மெட்ரோ ரயில் திட்டமே ஒரு தோல்வியான திட்டம்" என்று கூறினார். தொடர்ந்து, "வளர்ச்சித் திட்டம் வேண்டாமா?" என்று நிருபர் கேள்வி எழுப்பியதால் சீமான் ஆவேசமடைந்தார். அவர் அந்த நிருபரை ஒருமையில் பேசத் தொடங்கினார்.

மேலும் "எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சொன்னால் அரசு செய்து தானே ஆக வேண்டும்" என்று நிருபர் கூறியபோது, ஆவேசமாக இருக்கையில் இருந்து எழுந்த சீமான், நிருபரைப் பார்த்து, "உனக்கு என்ன பிரச்னை?" எனக் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, "ஒரு மைக்கை எடுத்துக்கொண்டு வந்தால், நீ என்ன பெரிய வெங்காயமா?, வெளியே போடா" என்று தகாத வார்த்தைகளால் திட்டி அநாகரிகமாகப் பேசினார். அதற்கு, "மரியாதையாகப் பேசுங்கள்" என நிருபர் கூறியதற்கு, "நீ முதலில் மரியாதையாகக் கேள்வி கேளுடா?" என்று மிரட்டும் தொனியில் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சீமானின் ஆதரவாளர்கள் அந்த நிருபரை வெளியே இழுத்துச் சென்று தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு உள்ளான அந்தச் செய்தியாளர் உடனடியாக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற்றார். பின்னர், வில்லியனூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வில்லியனூர் போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் (சட்டப் பிரிவுகள்) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
