மிளகாய் வத்தலுக்கு ரூ.25,000 ஆதார விலை... விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்திலேயே மிக அதிகளவில் மிளகாய் வத்தல் சாகுபடி செய்யும் பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தலை சிறந்து விளங்கி வருகிறது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல் நன்கு தரத்துடன் இருக்கின்ற காரணத்தினால் ஆண்டுதோறும் இங்கிருந்து பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர், விளாத்திகுளம், எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாய முறையில் ஆண்டுதோறும் உளுந்து, பாசி, மிளகாய், கம்பு, சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றில் குறிப்பாக இப்பகுதிக்கென்று பெயர்பெற்ற மிளகாய் பயிர் நடுவதில் இங்குள்ள விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
அதே போல ராபி பருவத்திற்கான மிளகாய் பயிர் விதைப்பை கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். மிளகாய் செடிகள் ஓரளவிற்கு நன்கு வளர்ந்து வரக்கூடிய தருணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர்மழையினால் விளாத்திகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் நீரில் மூழ்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நாசமாகின.
அதிலும் எஞ்சிய செடிகளை பேணிகாத்து அதற்கு உரமிடுதல், 3 முறை களை எடுத்தல், பூச்சி மருந்து தெளிப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.40 முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து மிளகாய் பழங்களை அறுவடை வரைக்கும் கொண்டு வந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த கன மழையால்... பழப்பறிக்கு காத்திருந்த மிளகாய் பழங்கள் செடிகளிலேயே சேதமடைந்ததோடு, பல பகுதிகளில் வத்தலுக்காக வெயிலில் காய வைத்திருந்த மிளகாய் பழங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டும், மழையில் நனைந்து சோடை வத்தலாகவும் பெருமளவில் பாழாகியுள்ளன.
இதனால் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையைக்காட்டிலும் தற்போது பருவம் தவறி பெய்த மழைதான் தங்களுக்கு பேரிடியாக உள்ளது என்று இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விவசாயிகள் எஞ்சிய மிளகாய் வத்தலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் அங்குள்ள வியாபாரிகள் அதனை அடிமாட்டின் விலைக்குக்கேட்பது போல ஒரு குவிண்டால் வெறும் ரூ.8 ஆயிரத்திற்கும், மழையில் நனைந்த சோடை வத்தலை கிலோ ரூ.15க்கும் நல்ல வத்தலை ரூ.80க்கு மட்டுமே என மிகக்குறைந்த விலைக்கு வாங்கிச்செல்வதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
சுமார் ஒரு ஏக்கர் மிளகாய் வத்தல் அறுவடை செய்வதற்கு நாற்று நட்டு தொடங்கி அடி உரம், பூச்சி மருந்து தெளிப்பு, 3 முறை களையெடுப்பு, உரமிடுதல், பழம் பறிக்க வேலையாட்கள் கூலி என கிட்டத்தட்ட ரூ.40-லிருந்து ரூ.50 ஆயிரம் வரை கூட்டுறவு சங்கம், தனியார் வங்கிகளில் நகைக்கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை மட்டுமே சம்பாதித்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை,
ஆகையால் தமிழ்நாடு அரசு விளாத்திகுளம் பகுதி மிளகாய் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இப்பகுதியில் உடனடியாக பயிர்க் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீடு வழங்குவதோடு, கரும்பு, வாழை, நெல் போன்ற பயிர்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளதைப்போல மிளகாய் வத்தலுக்கும் ஒரு குவிண்டால் ரூ.25 ஆயிரம் என்பதை ஆதார விலையாக நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மிளகாய் வத்தல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!