மாணவர்களுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை... ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு!
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (RTSE) வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கியத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வுத் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் படிக்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் தேர்வில் இருந்து தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் இந்த 50 மாணவர்களுக்கும், அவர்களின் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை என அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது, கிராமப்புற மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின்கீழ் நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வானது வரும் நவம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத்தாள்கள் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ஆகியவற்றைத் தேர்வுத் துறை இயக்குநரகம் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாணவர்களின் வருகைத் தாள்கள் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு, அதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல், மாணவர்கள் எந்த மையத்தில் தேர்வெழுத வேண்டும் என்ற தேர்வு மைய விவரத்தையும் மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தேர்வில் வெற்றி பெறத் தீவிரமாகத் தயாராக வேண்டும் என்று கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
