சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய உணவு... திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு!

 
சபரிமலை அன்னதானம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. பொதுமக்களின் பங்களிப்புடன் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் கூடிய சிறப்பான மதிய உணவு (சத்யா) வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு, தினமும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பக்தர்களின் எண்ணிக்கை குறித்து முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

சபரிமலை

கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தினசரி நிமிடத்திற்குச் சராசரியாக 85 பக்தர்கள் வீதம் 18 ஆம் படி வழியாக ஏற்றி விடப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சபரிமலையில் கூட்ட நெரிசல் குறைந்து, பக்தர்கள் எளிதாகச் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக டி.ஜி.பி. கூறினார். வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீசனை முன்னிட்டுச் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 18 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இரண்டாம் கட்டமாக 1,500 போலீசார் பணியில் பொறுப்பேற்றுள்ளனர். தேவைப்படும் நேரங்களில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநில போலீசாரும் சபரிமலை பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் தெரிவித்தார்.

சபரிமலை கூட்டம்

இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இனிமேல், அன்னதானத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்குடன், பொதுமக்களின் பங்களிப்புடன் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்குப் பாயசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பான மதிய உணவு (சத்யா) வழங்கப்படும் என்றும் தேவஸ்தானத் தலைவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!