பள்ளி மாணவன் காரில் கடத்தி கொலை.. உறவினர்கள் சாலைமறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவநட்டியை சேர்ந்தவர் சிவராஜ். இவரின் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாணவன் ரோகித்துக்கு உடல்நிலை சரியில்லை என பள்ளி செல்லாமல், வீட்டில் இருந்தார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் நேற்று மாலை 4 மணிக்கு கிரிக்கெட் விளையாட சென்றார். பின்னர் இரவு ஆகியும் மாணவன் வீடு திரும்பாததையடுத்து, பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் இரவு 8 மணிக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடித்துகொடுக்ககோரி ரோகித்தின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை அஞ்செட்டியில் சாலை மறியல் செய்தனர்.
இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்த போது, மாணவனை சிலர் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. சிசிடிவியில் அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், மாணவன் ரோகித்தை கொலை செய்து தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் வீசியதாக அவர்கள் கூறியதாக தெரிகிறது. போலீசார் வனப்பகுதிக்கு சென்றபோது, அங்கு காலில் வெட்டு காயங்களும் வயிற்றில் குத்தப்பட்டும் மாணவன் ரோகித் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்து, இதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் உடனடியாக விசாரணை செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி போலீசாரை கண்டித்தும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல்நிலை நிலவுவதால், ஓசூர் ஏ.எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவனை கொலை செய்தற்கான காரணம் குறித்து கைது செய்தப்பட்ட இரு வாலிபர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவனை கடத்தி செல்லபட்ட கார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டு இருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் நடந்து வருவதால் தேன்கனிக்கோட்டை, ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!