நீதிபதியைக் குறிவைத்து அரிவாள் வீச்சு - ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்!
தன்னுடைய குடும்ப வழக்கில் தீர்ப்புச் சாதகமாக வராது என்ற ஆத்திரத்தில், வாலிபர் ஒருவர் நீதிமன்ற அறைக்குள்ளேயே அரிவாளை வீசியது அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் - தங்க முனீஸ்வரி தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான ஜீவனாம்சம் வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்.

நாளை பிப்ரவரி 17ம் தேதி இந்த வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற இருந்த நிலையில், இன்று மதியம் பாலமுருகன் திடீரென வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். "ஒழுங்கா தீர்ப்பு சொல்லணும்" என்று கத்திக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார்.
பாலமுருகன் வீசிய அரிவாள், அதிர்ஷ்டவசமாக நீதிபதியின் மீது படாமல் வழக்கறிஞர்கள் அமரும் மேசைப் பகுதியில் விழுந்தது. இதனால் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் காயமின்றித் தப்பினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பாலமுருகனை மடக்கிப் பிடித்தனர். நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் 8-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரச் சோதனை நடத்திய பின்னரே யாரையும் உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால், பாலமுருகன் அந்தப் பாதையைத் தவிர்த்துவிட்டு, நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள காம்பவுண்டு சுவரைக் கடக்க ஒரு ஸ்டூலைப் பயன்படுத்தியுள்ளார். சுவரைத் தாண்டி குதித்து, யாருக்கும் தெரியாமல் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்குள் நுழைந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாலமுருகனைக் கைது செய்தனர். நீதிமன்றச் சிரஸ்தார் முருகையா அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி மற்றும் அரசுப் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
