உலகின் உயரமான 'ஒற்றுமை சிலை' சர்தார் வல்லபாய் பட்டேலை வடித்த சிற்பி ராம் சுதர் காலமானார்!
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த அந்த உன்னதக் கலைஞனின் கைவண்ணம் இனி நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும்! குஜராத்தின் நர்மதா நதிக்கரையில், வானுயர்ந்து நிற்கும் உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை'யை (Statue of Unity) செதுக்கிய மகா கலைஞன் ராம் சுதர் இன்று காலமானார்.

100 ஆண்டுகால கலைப் பயணம் முடிவு
புகழ்பெற்ற சிற்பியும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் சுதருக்கு இப்போது 100 வயது. முதுமை காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
1925-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ராம் சுதர். தனது அசாத்திய உழைப்பாலும், கற்பனைத் திறனாலும் இந்தியாவே வியக்கும் சிற்பக் கலைஞராக உருவெடுத்தார். சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை மட்டுமின்றி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை உள்ளிட்ட பல நூறு வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகளைத் தனது உளியால் செதுக்கியவர் இவரே.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. நூற்றாண்டு கண்ட அந்த மகா கலைஞனின் மறைவு, இந்தியக் கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், கலை உலகினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அடையாளங்களைச் செதுக்கிய அந்த சிற்பியின் உளி இன்று அமைதியானது!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
