செம மாஸ்... "ஒரு பேரே வரலாறு... அழிச்சாலும் அழியாது" - யூ-ட்யூப்பைத் தெறிக்கவிடும் 'ஜன நாயகன்' 2வது பாடல்!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "ஒரு பேரே வரலாறு" இன்று மாலை 6:30 மணியளவில் இணையத்தில் வெளியாகிப் புயலைக் கிளப்பி வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெளியாகும் முக்கியப் படமாகக் கருதப்படுவதால், இப்பாடல் வரிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே வெளியான 'தளபதி கச்சேரி' என்ற முதல் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், அனிருத்தின் துள்ளலான இசையில் வெளியாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி 'ஜன நாயகன்' திரைக்கு வரவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்; மேலும் மமிதா பைஜூ ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாக, இந்தப் படத்தின் டிரைலர் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத், அறிவு மற்றும் விஜய் இணைந்த முந்தைய பாடல் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள "ஒரு பேரே வரலாறு" பாடலும் விஜய்யின் அரசியல் மற்றும் திரைப்பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
