செங்கோட்டையன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் எதிர்ப்பு... ஏமாற்றத்துடன் திரும்பினார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பைச் சந்தித்தார்.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட த.வெ.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் புதிய கட்சி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, கே.ஏ.செங்கோட்டையன் கோபியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் பெத்திக்குட்டை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் த.வெ.க. தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செங்கோட்டையன் முடிவு செய்தார்.

அவர் சிலைக்கு அருகில் வந்தபோது, அங்கிருந்த அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து செங்கோட்டையனுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க.விலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் (த.வெ.க.) இணைந்த ஒருவர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கோஷமிட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் உருவானது.
நிலைமை மோசமடைவதைக் கண்ட கே.ஏ.செங்கோட்டையன், தேவையற்ற மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்காமலேயே அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து, அவர் மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.
கடும் அரசியல் மோதல்கள் நிலவி வரும் சூழலில், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரான செங்கோட்டையனுக்கு அவரது பழைய கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
