கெத்து காட்டும் செங்கோட்டையன்... 14 வழிதடங்கள், 1000 போலீசார்... க்யூஆர் கோடு தேவையில்லை... அனைவரும் வரலாம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்புப் பிரச்சாரக் கூட்டம், இன்று (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்துத் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் உற்சாகமாகப் பேசினார். "நாங்கள் சொல்லுவதைவிட, நீங்கள் நேரில் பார்த்து பத்திரிகைகள் மூலம் சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் மிக நேர்த்தியாகவும், மாநிலத்திற்கே முன்மாதிரியாகவும் செய்யப்பட்டுள்ளன" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டிற்கு வருவதற்குப் பாஸ் அல்லது கியூஆர் கோடு (QR Code) அவசியமா என்ற குழப்பத்திற்குச் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "பொதுமக்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக வந்து தலைவரின் உரையை ரசிக்கலாம். 35,000-க்கும் அதிகமான மக்கள் வந்தாலும் அவர்களை முறைப்படுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை தயாராக உள்ளது" என்று அவர் உறுதி அளித்தார். இதற்காக சுமார் 1,500 காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் எளிதாக வெளியேறவும் 14 பிரத்யேக வெளியேறும் வழித்தடங்கள் (Exit routes) அமைக்கப்பட்டுள்ளன.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மைதானத்தில் 58 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவசரத் தேவைக்காக 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் வெயிலைச் சமாளிக்கத் தனி சிகிச்சை முகாம்களும், கூடுதலாக 10 லாரிகளில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதி செய்ய 5 ட்ரோன்கள் மற்றும் 60 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மைதானம் முழுவதும் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்கு எவ்வித இடையூறுமின்றிப் பணியாற்றத் தனி மேடையும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக, "முன்னாள் அமைச்சர்கள் அல்லது முக்கிய நிர்வாகிகள் யாராவது இன்று தவெகவில் இணைவார்களா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "தலைவரின் உத்தரவுப்படி அனைத்தும் நடக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" என்று செங்கோட்டையன் ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்துள்ளார். இதனால் இன்றைய கூட்டத்தில் ஏதேனும் முக்கிய அரசியல் திருப்பங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
