"என்ன பொழப்பு இது? அவமானமா இருக்கு!” எம்.ஜி.ஆரை விட விஜய் பெரியவரா?" - செங்கோட்டையனை வறுத்தெடுத்த ஏ.கே.செல்வராஜ்!
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஈரோடு மாவட்ட அரசியலில் தற்போது பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழ்ந்து பேசியதற்கு, அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சை முன்வைத்து சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
சென்னையில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் விஜய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ஏ.கே. செல்வராஜ், "அப்படியென்றால் நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை காட்டிலும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை காட்டிலும் விஜய் பெரிய தலைவரா? உங்கள் வயதிற்கு இப்படிப் பேசலாமா? அதிமுக இயக்கத்தில் வளர்ந்து, நல்ல நிலைக்கு வந்த பிறகு இப்படித் தரம் தாழ்ந்து பேசுவது அவமானமாக இருக்கிறது. உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது" என்று ஆவேசமாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், கோபிசெட்டிபாளையம் எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்பதை உறுதிப்படுத்தினார். "விளையாட்டுப் போட்டியில் விசில் அடித்தால் 'அவுட்' என்று அர்த்தம். அதுபோல, செங்கோட்டையனின் அரசியல் அவுட் ஆகிவிட்டது. யார் பின்னால் வேண்டுமானாலும் போங்கள், ஆனால் நாவடக்கத்தோடு பேசுங்கள்" என எச்சரிக்கை விடுத்தார். செங்கோட்டையனோடு இருந்தவர்கள் கூட இன்று எடப்பாடியார் பக்கமே உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல தசாப்தங்களாக அதிமுகவின் தூணாக இருந்த செங்கோட்டையன், மாற்றுக்கட்சி மேடையில் விஜய்யைப் புகழ்ந்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அக்கட்சியின் மாவட்டச் செயலாளரே பகிரங்கமாகத் தாக்கிப் பேசியிருப்பது, ஈரோடு மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
