இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி... தீவிர சிகிச்சை!

 
நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக மூத்த ஆளுமையுமான ஐயா நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசியலில் எளிமையின் அடையாளமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லக்கண்ணு

கடந்த ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி, ஐயா நல்லகண்ணு அவர்கள் தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றார். வயது மூப்பு காரணமாக வாய் வழியாக உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்கு நேரடியாக உணவு செல்லும் வகையில் பிரத்யேகக் குழாய் பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதிலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குறிப்பாகச் சிறுநீரகத் தொற்று அறிகுறி தென்பட்டதால், அவர் மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாகச் சுவாசிக்க உதவியாகத் தொண்டையில் 'டிரக்யாஸ்டமி' குழாய் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுநீரகத் தொற்றுக்கும் சேர்த்துத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நல்லக்கண்ணூ

101 வயதைக் கடந்த மூத்த தலைவர் என்பதால், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தற்போது அவர் சீரான நிலையில் உள்ளதாகவும், தொற்று பாதிப்பைக் குறைக்கத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐயா நல்லகண்ணு அவர்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!