பயிற்சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பேச்சு மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திலிருந்து போலீசர் வரை பரபரப்பு நிலவுகிறது.
போலீசார் தெரிவித்த தகவலின் படி, பள்ளியில் படிக்கும் சில மாணவ–மாணவிகள் அண்மையில் ஒரு கிராமத்திற்கு செயல்முறை பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்டனர். மாணவர்கள் 6 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சியின் போது, மாணவிகளுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியிடம் அசிங்கமான வார்த்தைகள் பேசி தவறாக நடக்க முயன்றதாக தொடக்க புகார் எழுந்தது.

இந்த தகவலை அறிந்த மற்ற மாணவிகள், “எங்களுடனும் இதேபோல நடந்திருக்கிறார்” என்று கூறியதுடன், பல மாணவிகள் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மாணவிகள் இந்த விவரத்தை வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர் அன்னை சீபா பிளவர் லைட் அவர்களிடம் புகார் செய்தனர்.

ஆனால், முதற்கட்ட புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து பெற்றோர் நேரடியாக போலீசில் புகார் அளித்தனர். புகார் பெற்ற போலீசார், ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், மாணவிகளின் புகாரை கண்டுகொள்ளாமல் விட்டதாக தலைமை ஆசிரியை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவத்திற்குப் பின்னர் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியாகராஜன் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வெளிப்பட்டதையடுத்து, பள்ளி வளாகத்திலும், உள்ளூர் பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாணவிகள் பாதுகாப்பு குறித்து மாவட்டம் முழுவதும் விவாதம் எழுந்த நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
