மீண்டும் அதிர்ச்சி... நடுவானில் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்... 160 பயணிகள் உயிர் தப்பினர்!
கேரளாவையே அதிரவைத்த ஒரு 'திக் திக்' சம்பவம் இன்று காலை அரங்கேறியுள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடு நோக்கி 160 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோர விபத்து, நூலிழையில் பெரும் துயரத்தைத் தவிர்த்துள்ளது.
இன்று காலை அந்த விமானம் கேரளா வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் தரையிறங்கும் 'கியர்' (Landing Gear) பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த விமானி உடனடியாக அபாய எச்சரிக்கையை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு போக வேண்டிய விமானம், அவசரம் கருதி உடனடியாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது.

விமானம் தரையிறங்கப் போகிறது என்ற தகவல் கிடைத்ததும், கொச்சி விமான நிலையமே ஒரு போர்க்களத்தைப் போல மாறியது. தீயணைப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் என ஒரு பெரும் பட்டாளமே ரன்வே ஓரம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. அந்த 160 பயணிகளின் கதி என்னவாகுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் காத்திருந்தனர். சரியாக காலை 9.07 மணிக்கு, அந்த 'ராட்சதப் பறவை' கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் வந்து இறங்கியது. அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது.
டயரை பதம்பார்த்த 'வெளிநாட்டுப் பொருள்'
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவலின்படி, ஜெட்டா விமான நிலையத்தில் விமானம் கிளம்பும் போதே, ஓடுபாதையில் கிடந்த ஏதோ ஒரு வெளிநாட்டுப் பொருள் மோதியதில் விமானத்தின் டயர்கள் பலமாகச் சேதமடைந்திருக்கின்றன. இது நடுவானில் பறக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டதால், பெரும் ஆபத்தைத் தவிர்க்க விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

நல்லவேளையாக, விமானியின் சாதுர்யமான செயல்பாட்டினால் 160 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக விமானத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் விமான நிலைய அதிகாரிகள் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். வானில் நடந்த இந்தச் சம்பவம் கொச்சியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
