ரேஷன் கடையில் அதிர்ச்சி... "மெஷின் இருந்தாத்தானே காசு கொடுப்ப?" கைரேகை மிஷினைப் பிடுங்கிச் சென்ற நபரால் பரபரப்பு!
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு மற்றும் ₹3,000 ரொக்கப்பணம் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரு வினோதமான 'கடைத் திருட்டு' சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கட்டிடத் தொழிலாளி, தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு உற்சாகமாகப் பொங்கல் பரிசு வாங்கச் சென்றுள்ளார். வரிசையில் நின்று டோக்கனைச் சமர்ப்பித்த போது, கடை ஊழியர் சொன்ன தகவல் ரமேஷுக்கு இடியாக இறங்கியது. "உங்க மகன் சூர்யா ஏற்கனவே வந்து பொங்கல் பரிசையும், காசையும் வாங்கிட்டுப் போயிட்டாரே!" என்று ஊழியர் கூற, அங்கே தகராறு வெடித்தது.

ரமேஷின் முதல் மனைவி மகன் சூர்யா, தனது தாத்தாவுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் ஏற்கனவே தங்களது குடும்ப அட்டைக்குரிய பரிசைப் பெற்றுச் சென்றதை ஏற்க மறுத்த ரமேஷ் - மகாலட்சுமி தம்பதி, கடை ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற தம்பதி, "இந்த எந்திரம் இருந்தாத் தானே நீ எல்லாருக்கும் காசு கொடுப்ப? இதை நாங்களே எடுத்துட்டுப் போறோம்" என்று கூறி, கைரேகை வைக்கும் எந்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு தங்களது வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர்.
ரேஷன் கடையே ஸ்தம்பித்துப் போன நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த ரமேஷ், எந்திரத்தைத் திருப்பிக் கொடுத்ததுடன், கடை ஊழியருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளார்.
அரசுப் பணியைத் தடுத்தது, அரசு சொத்தைத் திருடிச் சென்றது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார், ரமேஷ் மற்றும் மகாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரமேஷ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு பொங்கல் பரிசுக்காகத் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட மோதல், இன்று சிறைவாசம் வரை கொண்டு போய் விட்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
