பெங்களூருவில் அதிர்ச்சி.. வழி கேட்பது போல் நடித்து பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை... சிசிடிவி ஆதாரத்துடன் இளைஞர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கபனவரா பகுதியில் தங்கியுள்ள பெண் மருத்துவருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபனவரா பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண் மருத்துவர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு தனது பணி முடிந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் விடுதியின் வாசலில் உள்ள கதவைத் திறக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் வழி கேட்பது போலப் பேச்சு கொடுத்துள்ளார். அந்த வாலிபர் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர், அவருக்குப் பதில் அளிக்காமல் கதவைத் திறக்க முற்பட்டார். அப்போது அந்த வாலிபர் திடீரென மருத்துவரைப் பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் சத்தமிட்டு உதவி கோரவே, பிடிபடுவோம் என்று அஞ்சிய அந்த வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த போலீசார், விடுதி மற்றும் அந்தச் சாலையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவில் இருந்த வாகன எண்ணை வைத்துத் துப்பு துலக்கியபோது, அந்த நபர் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த ராகேஷைத் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் மருத்துவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகரிக்கப் பெங்களூரு மாநகரக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
