காலையிலேயே அதிர்ச்சி... பேருந்து மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி!
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில், தனியார் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதி தரிசனம் முடிந்து திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது.
இன்று (டிசம்பர் 26, 2025) காலை, திருப்பதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி ஒரு குவாலிஸ் கார் சென்றுகொண்டிருந்தது. நந்தியாலா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாக வந்த அந்த கார், சாலைத் தடுப்பை (Divider) தாண்டி எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த மோதலில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்தவர்களில் 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விபத்து நிகழ்ந்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து வந்த போலீசார், கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு சீசன் என்பதால் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, ஓட்டுநர்கள் தூக்கமின்மை மற்றும் அதிவேகத்தைத் தவிர்த்து, சாலை விதிகளை மதித்துப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
