அதிர்ச்சி... தூத்துக்குடியில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி, போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தாலும் கூட பீடி இலைகள், போதைப்பொருட்கள் போன்றவைகள் அவ்வப்போது தொடர்ந்து பிடிபடுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார்ஜர் என்றழைக்கப்படும் மிதவை கப்பல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பழைய துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பார்ஜரை தடுத்து நிறுத்துமாறு கடலோர காவல் படைக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பார்ஜைரை மடக்கி நிறுத்தி கடலோர காவல் படையினர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 16 பார்சல்களில் கொடிய போதை பொருளான ஹசீஷ் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பார்சல்களில் இருந்த சுமார் 29 கிலோ எடை கொண்ட ஹசீசை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த போதைப் பொருட்களைக் கடத்தி சென்ற பார்ஜர் கப்பலில் வேலை செய்து வரும் ஆலந்தலையை சேர்ந்த கிளிப்டன், அவருக்கு கடத்தலில் உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நவமணி ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட இருவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!