சிகிச்சை முடிந்து ஐயா நல்லகண்ணு வீடு திரும்பினார்!!
தமிழக அரசியலின் முதுபெரும் தலைவர், எளிமையின் சிகரம் எனப் போற்றப்படும் ஐயா ஆர்.நல்லகண்ணு (101) அவர்கள், உடல்நலம் தேறி இன்று வீடு திரும்பிய செய்தி அவரது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு அவர்கள், கடந்த சில நாட்களாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஐயாவிற்கு, அடுத்த நாளே சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன.
உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்குத் தலைமை மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் அவரது உடல்நிலை சிகிச்சைக்குச் சிறப்பாக ஒத்துழைத்தது. இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
பரிசோதனை முடிவுகளில் தொற்று முழுமையாக நீங்கியதும், அவர் இயல்பாகச் சுவாசிப்பதும் உறுதியானது. இதையடுத்து, இன்று (ஜனவரி 8, 2026) மாலை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுத் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும், பார்வையாளர்களைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்கள் தலைவர்: 101 வயதிலும் எவ்வித ஆடம்பரமும் இன்றி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுத் தனது எளிமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழக அரசு இவருக்குத் தகைசால் தமிழர் விருது வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
