பாலியல் புகாரில் சிக்கிய அண்ணி... தலையைத் துண்டித்துக் கொன்ற கொழுந்தன்!
காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், கொழுந்தன் ஒருவன் தனது அண்ணியின் தலையை அரிவாளால் துண்டித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசி (35). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழரசி கடந்த 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது கணவரின் தம்பிகளான பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழரசி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழரசியின் புகாரின் பேரில், இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முருகானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன் பின்னர் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன் வெளியே வந்துள்ளார். கைது செய்யப்பட்ட முருகானந்தமும் சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார். காவல் நிலையம் செல்லவும், அதனால் தாங்கள் கைது செய்யப்படவும் அண்ணி தான் காரணம் என்ற கோபத்தில் இருவரும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் போதையில் வீட்டிற்குச் சென்று தமிழரசியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பாலகிருஷ்ணன், அரிவாளை எடுத்துத் தமிழரசியின் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்து விட்டுச் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தபோது வீட்டில் முருகானந்தம் மட்டும் இருந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தாலுகா போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். முதலில் சம்பவ இடத்தில் இருந்த முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாலியல் புகார் அளித்ததைக் காரணம் காட்டி, அண்ணியை இந்தக் கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் காட்டுக்கூடலூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
