தன் பெயரில் ₹80 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்த அக்கா கணவன்... திருப்பிக் கட்டாமல் கொலை செய்த மச்சான்!
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த ரகுபதி என்ற சமையல் மாஸ்டரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்தக் கொலைக்கு ரகுபதியின் மனைவி சந்திரா, அவரது தம்பி ராஜா மற்றும் மற்றொரு உறவினர் சரத்குமார் ஆகிய மூவரும் கூட்டாகச் சதி செய்தது அம்பலமாகி உள்ளது.
எண்ணேகோள்புதூரைச் சேர்ந்த ரகுபதி - சந்திரா தம்பதிக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. டிரைவர் வேலை பார்க்கும் சந்திராவின் தம்பி ராஜா, தொழில் செய்வதாகக் கூறி, தனது அக்கா சந்திராவிடம் பேசி, மாமா ரகுபதியின் பெயரில் பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.80 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். (வீட்டுக் கடன் ரூ.38 லட்சம், இன்னோவா கார் கடன் ரூ.20 லட்சம், ஈச்சர் வாகனம் கடன் ரூ.18 லட்சம்).

கடன் வாங்கிய ராஜா, மாதத் தவணையைச் சரிவரச் செலுத்தாததால், ரகுபதிக்கும் சந்திராவுக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சந்திரா, தனது தம்பி ராஜாவிடம், "இவன் இருந்தால் தான் இந்தக் கடன் தொல்லை தீராது. இவனை முடித்துவிட்டால், இன்சூரன்ஸ் பணமும் வரும், நீ சந்தோஷமாக இரு, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். அதன்படி, ரகுபதியைக் கொலை செய்ய ராஜா திட்டமிட்டுள்ளார்.
சதித் திட்டத்தின்படி, ராஜா தனது நண்பர் ராமசந்திரனிடம் கார் வாங்கி வந்துள்ளார். பின்னர், உறவினரான சரத்குமாருக்குப் பணத்தாசை காட்டி அவனையும் கூட்டுச் சேர்த்துள்ளார். நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், "உங்கள் பெயரில் உள்ள ஈச்சர் லாரியைப் காவல்துறையினர் பிடித்துவிட்டனர், வந்து விடுவிக்க வேண்டும்" என்று குடிபோதையில் இருந்த ரகுபதியை ராஜா வீட்டிற்கே சென்று அழைத்துச் சென்றார்.

எண்ணேகோள்புதூர் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் அருகே சென்றபோது, ராஜாவும் சரத்குமாரும் காரை வேகமாக ஓட்டி ரகுபதியின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி விபத்தை ஏற்படுத்தினர். கீழே விழுந்த ரகுபதியின் தலையில் இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, இறந்துவிட்டதாக நினைத்து இருவரும் தப்பி ஓடினர்.
உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்தக் கொலைச் சதி அம்பலமானது. இதையடுத்து, மனைவி சந்திரா, தம்பி ராஜா, உறவினர் சரத்குமார் ஆகிய மூவரையும் குருபரப்பள்ளி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
