திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்... மகன்களுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையே, குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க வந்த சிவகார்த்திகேயன், தனது இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகியோருக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனா ஆகியோரும் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோயில் கோபுரத்தின் முன்பு சிவகார்த்திகேயன் தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான 'பராசக்தி' இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன், தனது 'எஸ்.கே. புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மூலம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய்க்கிழவி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் 'தாய்க்கிழவி வாரா' என்ற முதல் பாடலை சிவகார்த்திகேயனே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி எழுப்பப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு எந்தவித எதிர்வினையும் காட்டாமல், தனது மௌனத்தின் மூலமே அவர் பதிலளித்து வருகிறார். குடும்பம் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றத்தில் மட்டுமே அவர் தற்போது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் ஆன்மீகச் சடங்குகளில் ஈடுபட்டுள்ளது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
