மாயமான சிறிய ரக விமானம்... பயணிகள் 3 பேரும் பலி!
தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம் ஜூன் 8 ம் தேதி மாலை 3 மணிக்கு மாயமானது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சார்பில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதுகுறித்து, குவாசுலு-நடால் மாகாண அதிகாரிகள் நேற்று ஜூன் 9ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், விர்ஜீனியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் அதன் இலக்கை அடையவில்லை. லேடிஸ்மித் பகுதிக்கு அருகில் அதன் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியிருப்பதை உறுதி செய்துள்ளதாக, அம்மாகாண அதிகாரிகள் இன்று ஜூன் 10ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக, தென் ஆப்பிரிக்க வானிலை நிலையம், குவாசுலு-நடால் மாகாணத்தில் ஜூன் 7 முதல் 11 ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
