பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை... விண்ணில் ஏவிய சிறிய ரக செயற்கைக் கோள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த ‘விகோ சாட்-1’ சிறிய ரக செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 13 மாணவர்கள் கொண்ட குழு கடந்த 6 மாதங்களாக உழைத்து இந்த முயற்சியை நிறைவேற்றியுள்ளது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பலூன் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் 22 கி.மீ உயரம் வரை சென்றது. அரசு பள்ளி மாணவர்களின் இந்த சாதனை பரவலாக பாராட்டுகளை பெற்றுள்ளது.
மாணவர் வி. விஷ்ணு தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், காற்றில் உள்ள பூஞ்சை துகள்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் தன்மையை அறிந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க உதவும் என்பது மாணவர்களின் நோக்கம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் உருவான இந்த திட்டம், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தியுள்ளது. சிறிய வயதிலேயே விண்வெளி கனவை நோக்கி அவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். மேலும் மயில்சாமி அண்ணாதுரை வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் சாதனையை கண்டு உற்சாகமடைந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி எதிர்கால விஞ்ஞானிகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
