இவ்வளவு சாதனைகளா... காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் வாழ்க்கைப் பயணம்... ஓர் பார்வை!

சென்னையில் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 93.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று மருத்துவர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்.
அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினார்.
'காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி அவர் வசமே நின்றது. இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.
பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996 மற்றும் 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அவருக்கானதாக அமையவில்லை. இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே அவரை வந்து தழுவியது. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.
'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.
பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.
அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!