பறை முழங்க... நிலம் அதிர... தொடங்கியது 'சென்னை சங்கமம்'.. பாடலாசிரியராக கனிமொழி புதிய அவதாரம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' இன்று மாலை எழும்பூரில் இனிதே தொடங்கியது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். தப்பாட்டம், கரகாட்டம் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் அரங்கேற, பறை இசை முழங்க விழா களைகட்டியது.

"நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் இந்த விழாவுடன் பொங்கலைக் கொண்டாடுவோம்" எனத் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தனது தங்கை கனிமொழி கருணாநிதி எம்பி-யை முதல்வர் மனதாரப் பாராட்டினார். இந்த ஆண்டு சென்னை சங்கமம் விழாவிற்காகக் கனிமொழி அவர்கள் பாடலாசிரியராகவும் களமிறங்கியுள்ளார். இதைக் குறிப்பிட்டு, "இந்த அண்ணனின் ஸ்பெஷல் வாழ்த்துகள்" என நெகிழ்ச்சியுடன் முதல்வர் வாழ்த்தினார்.
தொடக்க விழா இன்று முடிந்த நிலையில், நாளை முதல் (ஜனவரி 15) நான்கு நாட்களுக்குச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை.மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கலை நிகழ்ச்சிகளுடன் சேர்த்து, தீவுத்திடல் போன்ற இடங்களில் 'நம்ம ஊரு உணவுத் திருவிழா'வும் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பாரம்பரிய உணவுகள் இடம்பெறுகின்றன. இந்த 20 இடங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காணப் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
