கருத்து சுதந்திரத்தை முடக்குவது ஜனநாயக விரோத போக்கே... ஆதவ் அர்ஜுனா கணீர்!

தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இதழியல் ஊடகம் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேர்தல் மேலாண்மைக் குழு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா “சுதந்திரமான ஊடக அமைப்பே ஒரு நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கான காரணியாக உள்ளது. இந்நிலையில், அரசைப் பற்றிய விமர்சனத்திற்காக நூற்றாண்டைக் கொண்டாடும் ஊடகங்களில் ஒன்றான விகடனின் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும் செய்தி கண்டனத்திற்குரியது. இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்கிற குற்றச்சாட்டுக்கு இதுவரை ஏன் ஒன்றிய அரசு விளக்கம் கொடுக்கவில்லை?
கருத்துச் சுதந்திர உரிமையை அரசியலமைப்பு சட்ட உறுப்பு 19 வழங்கியுள்ளது. அப்படியிருக்கையில், ஊடக இணையதளத்தை முடக்குவது அரசியலமைப்பு அடிப்படைக்கு எதிரான ஜனநாயக விரோதப் போக்காகவே நாம் கருதவேண்டியுள்ளது. ஒன்றிய அரசானாலும், மாநில அரசானாலும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளைத் தமிழர்களாகிய நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளோம். இந்த விவகாரத்திலும் மக்களின் குரலோடு எங்களின் குரலும் சேர்ந்து ஒலிக்கும்!
கருத்துரிமையை அச்சுறுத்தும் வேளையில், மற்றொருபுறம் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்குரிய நிதியை ஒதுக்குவோம் என்கிறார் ஒன்றிய அமைச்சர். இருமொழிக் கொள்கை என்பதே தமிழ்நாட்டுக் கல்வியின் கருத்தியல் அடித்தளம்.
அதனாலேயே, தமிழ்நாடு தனிச்சிறப்பு மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளது. தமிழக மக்கள் மீதான மும்மொழி கொள்கை திணிப்பு என்பது எங்கள் தன்மான உரிமையைச் சீண்டிப்பார்ப்பதாக உள்ளது. தன்மானமா? நிதியா? என்றால் தன்மானமே எங்களுக்கான அடிப்படை உரிமை என்பதைப் பலமுறை உணர்த்திக்காட்டியவர்கள் தமிழக மக்கள். கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில், அந்த மக்களின் உணர்வுக்கு எதிராக மொழி ஆதிக்கத்தைத் திணிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தையே சிதைப்பதாகும். இதை ஒன்றிய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக மக்களின் தன்மானத்துக்கு எதிராகவும், அவர்களின் கருத்துரிமைக்கு எதிராகவும் ஒன்றிய அரசோ? மாநில அரசோ? யார் செயல்பட்டாலும் தமிழக மக்களோடு கரம் கோர்த்து எங்களின் குரலும் ஓங்கி ஒலிக்கும்!” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!