பள்ளி சுவர் விழுந்து மாணவன் பலி... ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மகன் மோகித் (12). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில், நேற்று காலை தேர்வு எழுதி முடித்த மோகித், பள்ளியில் உள்ள நடைபாதை கைப்பிடிச் சுவர் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கைப்பிடிச் சுவர் இடிந்து மோகித் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு விரைந்து வந்து, மாணவனின் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் மறியல் செய்தனர். ஆர்.கே. பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "அஜாக்கிரதையாகச் செயல்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்துள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளியின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்தக் கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
