கோர விபத்தில் மாணவி பலி.. விடுமுறை முடிந்து திரும்பிய போது துயரம்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை முடித்துவிட்டு கல்லூரிக்குத் திரும்பி வந்த அந்த மாணவி, விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது பெற்றோரை நிலைகுலைய வைத்துள்ளது.
சமீபத்தில் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு, உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு வந்தன.

அந்த உடல்களில், ஒரு இளம் பெண்ணின் உடல் மட்டும் உடனடியாக அடையாளம் காணப்படாமல் இருந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் குறித்து விவரங்கள் தெரியவந்தன. உயிரிழந்த அந்த இளம்பெண், திருச்சி மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டயானா (17) என்பது தெரியவந்தது.
இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். டயானா விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியான 11 பேரில் இவரும் ஒருவர் என்ற செய்தி, அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

விபத்து நடந்தவுடன், மகள் கல்லூரிக்குச் சென்றிருப்பார் என்று மாணவி டயானாவின் பெற்றோர் நினைத்திருந்தனர். விபத்தைப் பற்றி அறிந்த அவர்கள், மகளின் செல்போனைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், அது கிடைக்காததால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை போலீசார் புகைப்படம் எடுத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பின்னரே, தங்கள் மகள் விபத்தில் உயிரிழந்தது என்ற துயரச் செய்தி பெற்றோருக்குத் தெரியவந்தது. அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவில்லை.
உடனடியாக, பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த டயானாவின் உடலைக் கண்டு அவர்கள் கதறியழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்ணீர் விட வைத்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரிக்குப் புறப்பட்ட ஓர் இளைய உயிரை விபத்து பறித்த இந்தத் துயரச் சம்பவம், தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
